தொழும் போது பல் துலக்குதல்
ஷாபி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள் தொழுகையில் வரிசையில் நின்றவுடன். இகாமத் சொல்லி முடித்தவுடன் தங்கள் சட்டைப் பையில் உள்ள குச்சியை எடுத்து பல்லைத் துலக்கி விட்டு அப்படியே அந்தக் குச்சியை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு தொழுகின்றனர். கேரளாவிலும் ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் சில அரபு நாடுகளிலும் இந்த வழக்கம் காணப்படுகின்றது.
தமிழகத்திலும் ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் பல ஊர்களில் இந்த வழக்கம் முன்னர் அதிக அளவில் காணப்பட்டது. இப்போது இது பெருமளவு குறைந்து விட்டது.
ஷாபி மத்ஹபின் நூல்களிலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. எனவே இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
எனது சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாகி விடுவேன் என்பது இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 887
இந்த ஹதீஸ் வேறு பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டுள்ளதால் தொழுகைக்காக நின்றவுடன் பல் துலக்க வேண்டும் என்று இந்த நபிமொழியை அவர்கள் விளங்கியுள்ளனர்.
பல் துலக்குதல் என்றால் பல்லிலுள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும் என்பது தான். இவர்கள் தொழுகையில் நின்றவுடன் குச்சியால் பல் துலக்கி அந்த அழுக்கை விழுங்குகின்றனர். பல் துலக்கிய குச்சியைக் கழுவாமல் சட்டைப் பையில் வைக்கின்றனர்.
சுகாதாரத்தை வலியுறுத்துவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வழிமுறையை சுகாதாரத்திற்கு எதிரானதாக ஆக்கி விட்டனர்.
மத்ஹபுடைய அறிஞர்கள் என்போருக்கு போதிய ஆராய்ச்சித் திறன் இல்லை என்பதற்கு இதை ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவர் உளூச் செய்வதற்கு முன் பல் துலக்கி, பின்னர் உளூச் செய்து தொழுதால் அவர் தொழுகைக்கு முன் பல் துலக்கியவராவார். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தின் அடிப்படையில் தான் இந்தச் செய்தியை விளங்க வேண்டும். அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொழுகை நடத்தும் இடத்தில் நின்று கொண்டு பல் துலக்கியதில்லை. உளுச் செய்வதற்கு முன்னர் தான் பல் துலக்குவது அவர்களது வழக்கமாகும்.
மேலும் முஸ்னத் அஹ்மத் 9548 வது ஹதீஸில்.
“என் சமுதாயத்திற்கு சிரமம் தந்தவனாக நான் ஆகி விடுவேன் என்பது இல்லையானால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதையும் அபூஹுரைரா (ரலி) தான் அறிவிக்கின்றார்கள்.
எனவே ஒவ்வொரு தொழுகையின் போதும் என்பதை வ்வொரு உளூவின் போதும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இரத்தப் போக்கு நோயுடைய பெண்ணுக்கு, “ஒவ்வொரு தொழுகையின் போதும் குளித்துக் கொள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(முஸ்லிம் 502)
தொழுகைக்குத் தயாராக நின்றவுடன் அந்த இடத்தில் ளித்து அந்த இடத்திலேயே தொழ வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல! மாறாக தொழுகைக்கு வருவதற்கு முன் குளித்து உடை மாற்றிப் பின்னர் தொழ வேண்டும் என்பது தான் இதன் பொருள்.
நாகரீகத்தைக் கற்றுத் தர வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையை அநாகரீகச் செயலுக்கு ஆதாரமாக்கி விட்டனர். பல்லைத் துலக்கி விட்டு எச்சிலைத் துப்பாததும், வாய் கொப்பளிக்காததும் எப்படி பல் துலக்குவதாகும் என்ற சாதாரண சிந்தனை கூட இவர்களுக்கு இருக்கவில்லை. ஷாபி மத்ஹபின் மிகப் பெரிய அறிஞர்கள் எனக் கருதப் படுவோர் கூட இந்த ஹதீஸை சிறுபிள்ளைத் தனமாக விளங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment